மதுரை வண்டியூர் அருகே சவுராஷ்டிராபுரம் பகுதியில் நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் 10 க்கும் மேற்பட்ட மர்ம கும்பல்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் போதையில் சுற்றி திரிந்து உள்ளனர்.
இதனையடுத்து அந்த மர்ம கும்பல்கள் போதையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம், கார்களை அடித்து சேதப்படுத்தியதுடன், கடைகளையும் அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றை இழுத்து மூடுமாறு விற்பனையாளரை தாக்கியுள்ளனர். அதேபோல அந்த பகுதியில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மர்ம நபர்களை பிடிக்க சென்ற பொதுமக்களையும் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 6 இருசக்கர வாகனங்கள், 4 கார்கள், 10 கடைகள் ஆகியவை சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதை அறிந்த அந்த மர்மகும்பல் நேற்று இரவு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மேலும் பாதுகாப்பிற்காக 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் நேற்று இரவு குவிக்கப்பட்டு இருந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு, பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு கடைகளை மர்ம நபர்கள் ஆயுதங்களால் அடித்து நொறுக்கிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
