ஐரோப்பிய நாடுகளில் மிகக் குறைந்த நிபந்தனைகளுடன் நிரந்தரக் குடியுரிமை வழங்கும் நாடாக ருமேனியா தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியா உட்பட எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ருமேனியாவில் நிரந்தர குடியுரிமை பெற முடியும். இதன் மூலம் அந்நாட்டில் எந்தவொரு கட்டுப்பாடுமின்றி வாழ, வேலை செய்ய, கல்வி கற்கும் உரிமை கிடைக்கும்.
இந்த குடியுரிமைக்கான முக்கிய நிபந்தனையாக, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியைச் சேர்ந்தவர் அல்லாதவராக இருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ருமேனியாவில் சட்டபூர்வமாக வசித்தும், பணியாற்றியும் இருக்க வேண்டும். உரிய விசா மூலம் அந்நாட்டில் தங்கியிருந்தால், விண்ணப்பிக்க தகுதி கிடைக்கும்.
அதேபோல், விண்ணப்பதாரருக்கு மாதம் குறைந்தபட்சம் 750 யூரோக்கள் அதாவது சுமார் 77,834 ரூபாய் அளவில் நிலையான மற்றும் சட்டப்படி சம்பாதிக்கப்பட்ட வருமானம் இருக்க வேண்டும். மருத்துவக் காப்பீடு அவசியம். ருமேனியாவில் தங்குவதற்கான ஒரு நிரந்தர வசிப்பிடம் இருந்திருக்க வேண்டும். மேலும், ருமேனிய மொழி குறைந்தபட்ச அளவில் தெரிந்திருக்க வேண்டிய நிபந்தனையும் உள்ளது.
விண்ணப்பிக்கும்போது நிர்வாகக் கட்டணமாக 14 யூரோக்கள் – இந்திய ரூபாய் மதிப்பு படி சுமார் 1,447 ரூபாய் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படலாம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, 5 முதல் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிரந்தர குடியுரிமை அட்டை வழங்கப்படும்.
இத்திட்டம் வெளிநாட்டு குடிமக்களுக்கு ஐரோப்பாவில் வாழ்வதற்கான சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
