Sunday, October 5, 2025

எச்1பி விசாவுக்கான புதிய கட்டணத்தை ரத்து செய்யக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியுள்ள முடிவை ரத்து செய்யக் கோரி சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சுகாதார அமைப்புகள், மத நிறுவனங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கூட்டமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மனுவில், ‘எச்1பி விசாவுக்கான புதிய விதிமுறைகள் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி ட்ரம்ப் அறிவித்தார். ஏற்கெனவே 2,000 டாலரிலிருந்து 5,000 டாலராக உயர்த்தப்பட்ட கட்டணம், தற்போது பலமடங்கு உயர்த்தப்பட்டு 1 லட்சம் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு, திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்,’ என்று தெரிவித்துள்ளனர்.

எச்1பி விசா திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் போன்றோரை அமெரிக்காவில் பணியமர்த்துவதற்கான முக்கிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புதுமை வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த விசா பெரும் பங்காற்றி வருகிறது.

மனுதாரர்கள் மேலும் தெரிவித்ததாவது, ‘அரசின் தற்போதைய முடிவு காரணமாக மருத்துவமனைகள் மருத்துவ ஊழியர்களை இழக்க நேரிடும். தேவாலயங்கள் போதகர்களை இழக்க, பள்ளிகள் ஆசிரியர்களை இழக்க, தொழில்கள் கண்டுபிடிப்பாளர்களை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த உத்தரவை தடுத்து, தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நிலைத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

குறிப்பாக, தற்போது எச்1பி விசா வைத்திருப்போரில் மூன்றில் ஒரு பங்கு பேர் செவிலியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பாதிரியார்கள், போதகர்கள் எனச் சமூகத்துக்கு அவசியமான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News