இந்தியா மற்றும் சீனா இடையேயான நேரடி விமான சேவை, நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இந்த மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பயணிகள் விமானப் போக்குவரத்து குறித்த தொடர் ஆலோசனைகளின் பலனாக, அக்டோபர் 2-ஆம் தேதி அதாவது காந்தி ஜெயந்தி நாளில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தம், சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் சி ஜின்பிங்கும் நடத்திய சந்திப்புக்குப் பிறகு நிகழ்ந்த முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட இந்திய மற்றும் சீன விமான நிறுவனங்களுக்கு, குளிர்கால அட்டவணை முதல் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே நேரடி விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் தனது சேவையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 26 முதல், கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவிற்கு தினசரி நேரடி விமான சேவையை இண்டிகோ தொடங்க உள்ளது. இதனுடன், விரைவில் டெல்லி – குவாங்சோ இடையேயும் நேரடி சேவையை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது.
இந்த முடிவு இருநாடுகளுக்கிடையேயான பயண மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக மதிக்கப்படுகிறது. குறிப்பாக, வணிகரீதியான பரிமாற்றங்களும், சுற்றுலா மற்றும் கல்வி வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.