வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளியாக அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு சக்தி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இலங்கை பரிந்துரைத்தது.
இந்த தாழ்வு பகுதி குஜராத்தின் துவார்காவில் இருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில், வடமேற்கு திசையில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும், இது தீவிர புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த புயல் நாளைக்குள் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடலில் மத்திய பகுதிகளை அடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனைப்போலவே தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்கில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சில சமயங்களில் தீவிரமடையலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.