பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற விமானப்படை தாக்குதலில் குறைந்தது 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் அங்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சமீபத்தில், அந்த மாகாணத்தின் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா என்ற கிராமம் குறிவைக்கப்பட்டது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் போர் விமானங்கள் 8 குண்டுகளை வீசியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் பலர் பலியானார்கள். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.
இந்த தாக்குதல் அந்த பிராந்தியத்தில் கடும் அதிர்வலைகளை தூண்டியுள்ளது. ‘சொந்த மக்களை எதிரிகளாகக் கருதி ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஏற்க முடியாதது’ என சமூகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெறும் இந்த நடவடிக்கைகளில் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை ராணுவம் அலட்சியமாகக் கருதுகிறது என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் குற்றம் சாட்டியுள்ளது.
கைபர் பக்துன்க்வா போலீசார் அளித்த தகவல்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 605 தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 138 பொதுமக்களும் 79 போலீசாரும் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 129 சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களும் பலியானது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடக்கும் இந்தத் தாக்குதல்கள், அப்பாவி மக்களின் உயிரை காவு வாங்குவதோடு, பிராந்திய அமைதியையும் ஆபத்துக்குள்ளாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
