முதல்வர் விஜய் குடும்பம் குறித்து சர்ச்சை: அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு பதிவு…

சென்னையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், தமிழக அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து நடைபெறுவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும், கொள்கைகள் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒருவரின் குடும்பத்தினரையும் குறிப்பாக அவரது தாயாரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற தரக்குறைவான கருத்துகள் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியான அரசியலைச் சேர்ந்தவை என்றும், இன்றைய இளைஞர்களுக்கும் வளரும் குழந்தைகளுக்கும் இதுபோன்ற மூன்றாந்தர அரசியலை கற்றுக்கொடுக்கக் கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சியில் பேசிய கருத்துகளுக்கு எதிராக தவெக தரப்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜயை விமர்சித்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News