நாளுக்கு ஜஸ்ட் ரூ.333 மட்டும் எடுத்து வைங்க! ரூ.17 லட்சமாக மாற்றலாம்! அட்டகாசமான போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

ஒவ்வொரு நாளும் உயர்ந்துவரும் விலைவாசி மக்களை வேட்டையாடுபவையாகவே இருக்கின்றன. இந்த சூழலில் மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து சிறிதளவு தொகையைச் சேமித்து, பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அதில் முக்கியமாக, தபால் நிலையத்தின் சிறு சேமிப்புத் திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதால் பாதுகாப்பு குறித்த எந்த அச்சமும் இருக்காது.

இந்த வகையில் மிகவும் பிரபலமானது தொடர்வைப்பு திட்டம் அதாவது Recurring Deposit. இதில் ஒருவர் மாதம் வெறும் ரூ.100 முதலீடு செய்து கூட தொடங்கலாம். தினசரி சுமார் ரூ.333 சேமித்தால், ரூ.17 லட்சம் வரை பெறலாம் என்பது ஆச்சரியமாகத் தோன்றினாலும், அது தான் உண்மை.

தபால் நிலைய RD திட்டம் என்பது, மாதந்தோறும் ஒரு நிரந்தர தொகையை முதலீடு செய்யும் சேமிப்பு முறையாகும். தற்போது, இந்த திட்டத்திற்கான வருடாந்திர வட்டி விகிதம் 6.7% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த இந்திய குடிமகனும் இதில் கணக்குத் தொடங்கலாம். மேலும், 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளும் பெற்றோர் உதவியுடன் இதில் சேர முடியும்.

இந்தத் திட்டத்தின் காலம் 5 ஆண்டுகள். விருப்பமிருந்தால், அதை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கலாம். அவசரத் தேவைக்கு, 3 ஆண்டுகள் முடிந்த பின் முன்கூட்டியே கணக்கை மூடவும் முடியும்.

உதாரணமாக, தினமும் ரூ.333 சேமித்தால், மாதம் சுமார் ரூ.10,000 சேமிக்கலாம். அதை RD கணக்கில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.6,00,000 முதலீட்டுக்கு ரூ.1,13,659 வட்டி சேர்ந்து, மொத்தம் ரூ.7,13,659 கிடைக்கும். இதை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால், 10 ஆண்டுகளில் ரூ.12,00,000 முதலீட்டுக்கு ரூ.5,08,546 வட்டி கிடைத்து, மொத்தம் ரூ.17,08,546 பெற முடியும்.

Related News

Latest News