இந்தியாவில் 5 முதல் 15 வயதுவரையிலான குழந்தைகளுக்கான ஆதார் கார்டுகளில் பயோமெட்ரிக் அப்டேட் செய்தல் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் முகாம்கள் அமைத்து, நிலுவையில் உள்ள குழந்தைகளின் பயோமெட்ரிக் அப்டேட்டுகளை முடிப்பதில் பள்ளிகள் மற்றும் மாநிலங்கள் முழுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என UIDAI உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்யாமல் இருந்தால், அரசு திட்டங்களின் பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். மேலும், NEET, JEE, CUET மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளில் பதிவு செய்வதில் தடைகள் வரலாம். எனவே, ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
இந்த திட்டம் மூலம் சுமார் 17 கோடி ஆதார் எண்களில் பயோமெட்ரிக் தகவல் புதுப்பித்தல் நடைபெற உள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் தாமதம் செய்யாமல் விரைவில் பள்ளிகளை அணுகி முகாம்களில் பங்கேற்று, பயோமெட்ரிக் அப்டேட்டுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.