இந்தியா – சீனா இடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு எல்லைத் தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடங்கியிருப்பது, சர்வதேச அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி கொள்கைகள் மற்றும் ஆசியாவில் தாக்கம் செலுத்தும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை வைத்து பார்க்கும்போது, இந்த முன்னேற்றம் “டிரம்புக்கு விழுந்த அடியா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனாவின் எல்லையை தாண்டிய பகுதிகளில், இந்திய வணிகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வணிக பரிமாற்றம் தொடங்கியிருப்பது, இரு நாடுகளும் அரசியல் மோதல்களைத் தாண்டியும் பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்தத் தயாராக உள்ளன என்பதைக் காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எல்லை பிரச்சினைகள் காரணமாக குறைந்து போன வர்த்தகம், தற்போது உயிர் பெற்று வருகிறது.
இந்நிலையில், டிரம்ப் ஆட்சி பொறுப்பேற்றது முதல், அமெரிக்கா இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் கடுமையான வரி மற்றும் வர்த்தகத் தடைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பாக, இந்தியாவின் ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக ஆகிவிட்டது.
இதற்கிடையே, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை அழைத்து சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த மாநாடு தியாஞ்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீனா அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொள்ள இருப்பதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எல்லைத் தாண்டிய வர்த்தக தொடக்கம், சர்வதேச அரங்கில் இந்தியா–சீனா உறவுகளில் புதிய அத்தியாயமாகவே கருதப்படுகிறது. மேலும் இது ரஷ்ய – சீனா நல்லுறவுக்கும் வலுசேர்ப்பதாக இருக்கிறது.