திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் புலிவலம் பகுதியில் அபிராமி அண்ட் கோ என்கிற பர்னிச்சர் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 22ம் தேதி மாலை 4 மணிக்கு விசிக திருவாரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பூபாலன், துணைச் செயலாளர் வீரையன் விசிகவைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்து கடந்த 24ஆம் தேதி திருவாரூர் கீழவீதியில் நடைபெற்ற திருமாவளவன் பிறந்தநாள் விழாவான மதச்சார்பின்மை காப்போம் பேரணியின் தீர்மான விளக்க பொதுக் கூட்டத்திற்கு பணம் கேட்டுள்ளனர்.
அப்போது கடையில் வேலை பார்த்த பெண் ஊழியர், உரிமையாளர் கடையில் இல்லை வெளியூர் சென்று விட்டார் என்று கூறியுள்ளார்.அதற்கு அவர்கள் அவரிடமிருந்து தொலைபேசி எண்ணை வாங்கி அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.அப்போது அவர் தான் வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த விசிகவினர், பொருட்களை தூக்கி சென்று விடுவோம், கடையை அடித்து நொறுக்கி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
இதனையடுத்து கடையின் உரிமையாளர் ஜெயபாலன், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததுடன் விசிகவினர் கடை புகுந்து மிரட்டும் சிசிடிவி வீடியோ பதிவையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இருப்பினும் இது குறித்து காவல்துறையினர் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விசிகவினர் கடைக்குள் புகுந்து பணம் கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது என்னிடம் அடிக்கடி வந்து பணம் கேட்டுள்ளனர்.நானும் கொடுத்துள்ளேன்.அன்று வெளியூரில் இருந்ததால் நேரில் வந்து பார்க்கலாம் என்று கூறினேன்.நான் கடவுள் பக்தி அதிகம் உள்ளவன் சிவனடியாராக இருக்கிறேன்.எனக்கு எதிர்கொள்கை உடைய கட்சியாக இருந்தாலும் உள்ளூர்வாசிகள் என்பதால் நான் அவர்களை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக அடிக்கடி பணம் கொடுத்து வந்தேன்.இப்போது இது போன்று மிரட்டி உள்ளது வருத்தமளிக்கிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என்று கூறினார்.