நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உணவருந்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு அரசுப் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக, பல்வேறு கட்டமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர்.