இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன்,’ஹிட்மேன்’ ரோஹித் சர்மா. ஆனால், அவருக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்தப் போவது யார்? இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு இப்போது விடை தெரிய ஆரம்பித்திருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், இதுகுறித்து ஒரு முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். அவர் சொல்வது என்னவென்றால், “ரோஹித் சர்மாவுக்கு இப்போது 38 வயது நெருங்குகிறது. 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு அவர் ஓய்வு பெறுவார் என நம்புகிறேன். அவர் விலகும்போது, அந்த இடத்திற்கு வரப்போவது இளம் புயல் சுப்மன் கில் தான்!” என்கிறார்.
இது வெறும் கணிப்பு மட்டுமல்ல, அதற்கான அறிகுறிகளும் வலுவாகத் தெரிகின்றன. ஷுப்மன் கில்லின் வளர்ச்சி ஒரு விசித்திரக் கதை போலவே இருக்கிறது.
ஏற்கனவே, இங்கிலாந்துக்கு எதிரான சவாலான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வழிநடத்தி, தொடரை 2-2 என சமன் செய்தார் கில். அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை T20 தொடரில், சூர்யகுமார் யாதவ் கேப்டன் என்றால், ஷுப்மன் கில் தான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அவருக்குக் கிடைக்கும் அடுத்தகட்ட அங்கீகாரம்.
அதுமட்டுமல்ல, ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் கில். ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரிலும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து தனது தலைமைப் பண்பை நிரூபித்துள்ளார்.
இந்த வளர்ச்சிக்கு பிசிசிஐ-யின் முழு ஆதரவும் இருக்கிறது. தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் இதுபற்றிப் பேசும்போது, “‘கில்லிடம் நாங்கள் சிறந்த தலைமைப் பண்புகளைப் பார்க்கிறோம். கேப்டன் என்ற pressure இருக்கும்போதும், அவர் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படுவது ஒரு சிறந்த அறிகுறி’ என்று பாராட்டியுள்ளார்.
ஆக, டெஸ்ட், T20, ஒருநாள் என மூன்று ஃபார்மட்டுக்குமே ஷுப்மன் கில் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக மெல்ல மெல்ல உருவாகி வருகிறார். ரோஹித் சர்மாவின் அனுபவத்திற்குப் பிறகு, ஷுப்மன் கில்லின் இளமையும், ஆக்ரோஷமான ஆட்டமும் இந்திய அணியை அடுத்தகட்ட வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.