மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள அண்ணா மாளிகைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில், காவல்துறை இவர்கள் அனைவரையும் குண்டுகட்டாக கைது செய்தனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி தின சம்பளமாக ரூ.26ஆயிரத்தை வழங்கிட வேண்டும், அனைத்து பிரிவு பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்தும் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
மேலும் மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய 3 நாட்கள் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளையும், முன் வைத்த கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் அவமதிக்கும், பழிவாங்கும் அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும். இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் தலைமையிலான மதுரை மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகள் நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அவற்றில் எதுவும் முடிவு ஏற்படாத நிலையில், தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்ட நிலையில், காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள அண்ணா மாளிகை வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.