தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்படாததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, பல்லாவரத்தில் இருந்து பொழிச்சலூர் செல்லும் முக்கியப் பேருந்து வழித்தடத்தில் உள்ள பம்மல் முதல் நேரு நகர் வரையிலான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பம்மல் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் திறந்த நிலையில் உள்ளதால், தடுப்புகள் (barricades) மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. இது மேலும் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.
இதேபோல, நேரு நகர் கலைஞர் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இந்த சாலை வழியாக கவுல் பஜார் போன்ற பகுதிகளுக்குச் செல்ல முடியும் என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியைப் பயன்படுத்துகின்றன. சாலைகள் மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதோடு, விபத்துகளுக்கும் ஆளாக நேரிடுகிறது.
இது குறித்து பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சாலை சீரமைப்புப் பணிகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அடுத்த சில நாட்களில் பணிகள் தொடங்கப்படும், விரைவில் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்” எனத் தெரிவித்தனர். இருப்பினும், சாலைகள் உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.