இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில், கேஎல் ராகுலால் துணை கேப்டன் ரிஷப் பண்ட், நைட் வாட்ச்மேன் ஆகாஷ் தீப் இருவரும் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். இது இந்தியாவிற்கு மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
முன்னதாக துணை கேப்டன் ரிஷப் பண்ட் சிங்கிள் எடுக்க முயற்சி செய்து அவுட் ஆனார். அவரின் இந்த ரன் அவுட் மிகப்பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவசரப்பட்டு ரன் அடிக்க வேண்டிய கட்டாயமில்லை.
ஆனால் 99 ரன்னில் இருந்த ராகுல் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக, ரிஷப் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி விட்டார். இதை ராகுலும் ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார். அதில், ” தவறு என் மீதுதான். உணவு இடைவேளைக்கு செல்வதற்கு முன்பே, சதம் அடித்துவிட விரும்புகிறேன் என ரிஷப் பண்டிடம் நான்தான் கூறினேன்.
இதனால்தான், கடைசி ஓவரில் அவசரமாக சிங்கிள் எடுத்து, எனக்கு ஸ்ட்ரைக் கொடுக்க விரும்பினார். ஆனால், எதிர்பாராத விதமாக அது ரன்அவுட்டில் போய் முடிந்தது. இது நடைபெற்றிருக்க கூடாதுதான். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது,” என்று ஒப்புக் கொண்டார். என்றாலும் 74 ரன்னில் இருந்த ரிஷப் அவுட் ஆனதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தநிலையில் நைட் வாட்ச்மேனாக இறக்கி விடப்பட்ட, ஆகாஷ் தீப் ரன் அவுட்டுக்கும் ராகுல் காரணமாகி இருக்கிறார். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டம் முடிவடையும் தருவாயில் இருக்கும்போது, மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால், முக்கிய வீரர்களை பாதுகாக்க கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் களமிறக்கப்படுவர். இவ்வாறு களமிறங்கும் வீரர்களை நைட் வாட்ச்மேன் என்று குறிப்பிடுவது வழக்கம்.
அப்படி நைட் வாட்ச்மேனாக இறங்கிய ஆகாஷ் தீப் 1 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அந்த இடத்தில் ஆகாஷுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ராகுல் ஆடியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. பென் ஸ்டோக்ஸ் பந்தில் சிங்கிள் தட்டி ஆகாஷுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க, ஸ்டோக்ஸ் பந்தில் கிளீன் போல்டாகி அவர் நடையை கட்டினார்.
ராகுலின் இந்த செயல் மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ஆகாஷ் தீப்பிற்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் அவரின் விக்கெட்டினை பாதுகாத்திருக்க வேண்டும் என்று, ரசிகர்கள் ராகுலை வறுத்தெடுத்து வருகின்றனர்.