கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வேக்ஃபிட் நிறுவனம் சார்பில் ஸ்லீப் இண்டர்ன்ஷிப் நான்காவது சீசன் தொடங்கியது. 60 நாட்கள் நடைபெற்ற இந்த தூக்கப் பயிற்சி முகாமில் பலரும் கலந்து கொள்ள விண்ணப்பித்தனர். அதில் 15 பேர் மட்டுமே இந்த பயிற்சியில் நேரில் பங்கேற்றனர்.
இந்த பயிற்சி முகாமில், ‘தூக்கப் பயிற்சியாளர்’ என அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து 9 மணி நேரம் தரமான தூக்கம் பெற வேண்டும் என்பதே முக்கிய இலக்காக இருந்தது. இதற்காக, வேக்ஃபிட் நிறுவனத்தின் சிறப்பு மெத்தைகள் மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் நவீன contactless சாதனங்கள் வழங்கப்பட்டன.

இந்த போட்டியில், புனேவைச் சேர்ந்த யுபிஎஸ்சி தேர்வாளர் பூஜா மாதவ் வவஹல், 91.36 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். அவருக்கு ‘ஸ்லீப் சாம்பியன் ஆஃப் தி இயர்’ என்ற பட்டம் மற்றும் ரூ.9.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மற்ற பங்கேற்பாளர்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.