இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக, 3 ICC கோப்பைகளை வென்றவர் மகேந்திர சிங் தோனி. கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் ஓய்வினை அறிவித்த தோனி, தற்போது IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
43 வயதிலும் கேப்டனாக இருந்து சென்னையை வழிநடத்துவதற்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்தாலும், மறுபுறம் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று விமர்சனங்களும் எக்கச்சக்கமாக எழுந்துள்ளன. இந்தநிலையில் தோனியின் அண்மைய செயல் ஒன்று, சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகி உள்ளது.
எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் களத்தில் அமைதியாக செயல்படுபவர் என்பதால் தோனியை, ‘ Cool Captain’ என்று ரசிகர்கள் அழைப்பது வழக்கம். இந்தநிலையில் அந்த வார்த்தைக்கு காப்புரிமை விண்ணப்பித்து, தற்போது அதற்கான உரிமையை தோனி பெற்றுள்ளார்.
இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2023ம் ஆண்டிலேயே தோனி விண்ணப்பித்து இருக்கிறார். விளையாட்டுக்கான பயிற்சி, விளையாட்டு பயிற்சிக்கான வசதிகள் வழங்குதல், விளையாட்டு பயிற்சி மற்றும் சேவைகள் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வார்த்தை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி அந்த வார்த்தையை யாரும் பயன்படுத்த முடியாது.
ஒருவேளை பயன்படுத்தினால் அதற்காக தோனியிடம் அனுமதி வாங்க வேண்டும். தோனி இந்த வார்த்தையை பயன்படுத்துவதற்கு யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால், தெரிவிப்பதற்கு வருகிற அக்டோபர் 15-ந் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டு உள்ளது. அதுவரை யாரும் ஆட்சேபம் தெரிவிக்காமல் இருந்தால், முறைப்படி பதிவு செய்யப்படும் நிலைக்கு முன்னேறும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்தநிலையில் தோனியின் இந்த செயல் தற்போது சமூக வலைதளங்களில், கடும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள், ” உங்க ஜூனியர் விராட் என்னை யாரும் Kingனு அழைக்க வேண்டாம்னு சொல்றாரு. ஆனா நீங்க ரசிகர்கள் வச்ச பட்டப்பெயருக்கு உரிமை வாங்குறீங்க. இதேபோல அஜித் கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட ‘தல’ பட்டத்துக்கும், அடுத்து உரிமை வாங்குவீங்களா?
என்ன கேட்டா Cool Captain அழைக்கிறதுக்கு உங்கள விடவும் தகுதியானவர் Kane Williamson தான். எதிர்காலத்துல நிறைய Cool Captainகள் கிரிக்கெட்ல உருவாகலாம். அப்படி இருக்கும்போது நீங்க இப்படி செஞ்சது அப்பட்டமான சுயநலம்,” இவ்வாறு கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.