இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடம் பெற்ற கோலார் தங்க வயல்கள் – KGF – மீண்டும் உயிர் பெறப்போகின்றன என்பது இப்போது ஒரு பெரும் செய்தியாக மாறியிருக்கிறது. கர்நாடகாவில் அமைந்துள்ள இந்த தங்கச் சுரங்கம், சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பட உள்ளதோடு, சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் தங்க உற்பத்தி தொடங்கும் முதல் முயற்சியாக இப்போது தொடங்கப் படுகிறது.
2001ஆம் ஆண்டு, குறைந்த தங்க இருப்பும், அதிக செலவுகளும் காரணமாக மூடப்பட்ட KGF, இப்போது தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்திருப்பதாலும், நவீன தொழில்நுட்பங்களால் குறைந்த செலவில் தங்கம் பெற முடியும் என்ற நம்பிக்கையுடனும் மீண்டும் திறக்கப்படுகிறது.
1880களில் பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட இந்த சுரங்கம், உலகின் ஆழமான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாக இருந்தது. சுமார் நூறு ஆண்டுகளில் 800 டன் தங்கம் இங்கு உற்பத்தி செய்யப்பட்டது.
இப்போது, 2024 ஜூன் மாதத்தில் கர்நாடக அரசின் அமைச்சரவை, பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் – (BGML)– நிறுவனம் கொண்டுள்ள 1003 ஏக்கர் நிலத்தில் உள்ள 13 கழிவு மேடுகளில் தங்க உற்பத்திக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மேடுகளில் மட்டுமே சுமார் 23 டன் தங்கம் இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த முயற்சியில் பொது மற்றும் தனியார் முதலீட்டுகள் இணைந்துள்ளன. நவீன ஹீப் லீச்சிங் மற்றும் கார்பன்-இன்-பல்ப் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால், ஆண்டுக்கு சுமார் 750 கிலோ தங்கத்தை இங்கு உற்பத்தி செய்ய முடியும்.
இந்தியா, உலகத்தில் அதிகம் தங்கம் வாங்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. ஆண்டுக்கு 800 முதல் 900 டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. KGF மீண்டும் செயல்படுவதால், இந்த இறக்குமதியை குறைத்து, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும் வெகுவாகக் குறைக்க முடியும்.
முக்கியமாக, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அந்நியச் செலாவணியும் மிச்சமாகும். இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பலன்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.