சேலத்தில் தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்து

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (34). இவர் தனக்கு சொந்தமான மினி லாரியில் பழனியம்மாள்(65), மாரியம்மாள்(56), சித்துராஜ்(58), தனுஷ், விக்ரந்த் ஆகிய ஐந்து பேரை ஏற்றிக் கொண்டு நாமக்கல் மாவட்டம் கோழிக்கால்நத்தம் என்ற பகுதியில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது சுண்ணாம்புக்குட்டை பஸ் ஸ்டாப் என்ற இடத்தில் மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேங்காய் லோடின் மேல் பகுதியில் அமர்ந்து வந்த பழனியம்மாள், மாரியம்மாள், சித்துராஜ், மற்றும் டிரைவர் செல்வன் ஆகிய 4பேருக்கு காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மினி லாரியில் வந்த தனுஷ், விக்ரந்த் ஆகியோர் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் உடனடியாக சாலையில் கிடந்த லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு செல்லும்போது வாகனத்தின் மேல் பகுதியில் தொழிலாளர்களை அமர வைத்து செல்லும் உரிமையாளர் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..

Related News

Latest News