நிறுத்தி வைக்கப்பட்ட IPL தொடர் மீண்டும் ஆரம்பித்ததில் இருந்தே, BCCIக்கு நாள்தோறும் புதுப்புது சிக்கல்கள் முளைத்து வருகின்றன. அவற்றை சரிசெய்யும் வகை தெரியாமல் BCCI விழி பிதுங்கி நிற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியால் IPL தொடரை விட்டு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் வெளியேறி விட்டனர்.
இதனால் விதியை திருத்தி மாற்று வீரர்களை அணிகள் வாங்கிக் கொள்ளலாம் என்று BCCI அறிவித்தது. இதையடுத்து மழையால் போட்டிகள் ரத்து செய்யப்படும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. Play Off ரேஸ் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், முன்னதாக 1 மணி நேரமாக இருந்த காத்திருப்பு நேரத்தை, BCCI தற்போது 2 மணி நேரமாக மாற்றி அறிவித்து உள்ளது.
இதற்கு முன்பு வரை IPL போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், கூடுதலாக 1 மணி நேரம் மட்டுமே வழங்கியிருப்பார்கள். அதாவது, இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்க வேண்டும். மழை வந்து குறுக்கிட்டால் 8 மணி 40 நிமிடங்கள் வரை காத்திருப்பு நேரம்.
அதற்கு பிறகு ஒவ்வொரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் குறைக்கப்படும். கடைசியாக இரவு 10 மணி 56 நிமிடங்களுக்கு போட்டி தொடங்கவில்லை எனில், அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பிரித்து வழங்கப்படும்.
இதில் லேட்டஸ்டாக மழையால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு, இன்னும் கூடுதலாக 1 மணி நேரத்தை வழங்கியிருக்கிறார்கள். அதாவது, இரவு 9 மணி 40 நிமிடங்கள் வரைக்கும் ஓவர்கள் குறைக்கப்படாது. கடைசியாக இரவு 11 மணி 56 நிமிடங்கள் வரை பார்ப்பார்கள்.
அதற்குள் டாஸ் போடப்பட்டு விட்டால் 5 ஓவர்கள் போட்டியை நடத்தி முடித்து விடலாம். IPL தொடரில் சுவாரஸ்யத்திற்காக இந்த கூடுதல் 1 மணி நேரத்தை வழங்கி உள்ளனர். இதில்தான் தற்போது சிக்கல் முளைத்துள்ளது.
நடப்பு சாம்பியன் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில், இந்த விதி அமல்படுத்தப் படவில்லை. ஆளுக்கு ஒரு புள்ளி என்று வழங்கப்பட்டதால் கொல்கத்தா Play Off ரேஸில் இருந்தே வெளியேறி விட்டது. தற்போது BCCI இந்த விதியை எடுத்து வந்திருப்பதால், கொல்கத்தா நிர்வாகம் கடுப்பில் இருக்கிறதாம்.
எங்களுக்கும் இதே விதியை கொண்டு வந்திருந்தால் Play Off ரேஸில் நீடித்திருப்போம். BCCI இப்படி செய்வது நியாயமில்லை,” என அதன் CEO வெங்கி மைசூர் குமுறி இருக்கிறார். இன்னொருபுறம் வான்கடேவில் மழை வர வாய்ப்பிருப்பதால், டெல்லி – மும்பை போட்டியை வேறு நகரத்திற்கு மாற்ற வேண்டும்.
என்று டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் BCCIயிடம் கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை BCCI கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அதேநேரம் மே 23ம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு – ஹைதராபாத் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று, அந்த போட்டியை மட்டும் பெங்களூருவில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு மாற்றி வைத்துள்ளது.
இதனால் ‘ஒரு கண்ணுல வெண்ணெய் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பா? என்று, கொல்கத்தா, டெல்லி அணிகளின் உரிமையாளர்கள் கொந்தளித்துப் போய் இருக்கின்றனராம். இந்த புதிய தலைவலியை எப்படி சரிசெய்வது? என்று தெரியாமல், BCCI தலையை பிய்த்துக் கொண்டுள்ளதாம். மொத்தத்தில் இந்த நடப்பு IPL தொடர் BCCI தொடங்கி ரசிகர்கள் வரை, யாருக்குமே முழுமையானதொரு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.