ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, Play Off சான்ஸை இழந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதன்மூலம் சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா வரிசையில் தற்போது லக்னோவும் இணைந்துள்ளது.
ஏற்கனவே குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் தங்களின் Play Off வாய்ப்பினை உறுதி செய்து விட்டன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் வரிந்து கட்டி நிற்கின்றன. இதனால் Play Off சுவாரஸ்யம் இன்னும் நீடிக்கிறது.
இந்தநிலையில் மே 19ம் தேதி நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டியில், வீரர்கள் களத்திலேயே மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ மார்ஷ், மார்க்ரம், பூரன் அதிரடியால் 205 ரன்களை குவித்தது.
ஆனால் ஹைதராபாத் அணி இந்த ரன்னை 18.2 ஓவரிலேயே Chasing செய்து விட்டது. குறிப்பாக SRH வீரர் அபிஷேக் சர்மா லக்னோ பவுலர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து விட்டார். 20 பந்துகளில் 59 ரன்கள் குவித்த அபிஷேக், திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அபிஷேக் வெளியேறியபோது திக்வேஷ் Notebook செலிபிரேஷனில் ஈடுபட்டார். அத்துடன் விட்டிருந்தால் பிரச்சினையில்லை. அபிஷேக்கை பார்த்து, ”கெளம்பு காத்து வரட்டும்” என்பது போல சைகை செய்தார். இதைப்பார்த்த அபிஷேக் கடுப்பாகி, ”உன் முடியை ஒட்ட நறுக்கிருவேன்” என்று பதில் சைகை காட்டினார்.
இதனால் இருவரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது. பின்னர் நடுவர்களும், சக வீரர்களும் தலையிட்டு அபிஷேக் – திக்வேஷை சமாதானம் செய்து பிரித்து விட்டனர். விக்கெட் எடுத்து அதை வித்தியாசமாக கொண்டாடுகிறேன் என்ற பேரில், திக்வேஷ் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் அவருக்கு அடுத்த போட்டியில் விளையாட தடையும், போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல அபிஷேக்கிற்கும் ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.