Tuesday, April 22, 2025

UPSC தேர்வு : ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!

2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று(ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். அதேபோல, இந்திய அளவில் 39ஆம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:- எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Latest news