உக்ரைனிலிருந்து 800 இந்தியர்களை மீட்டுவந்த பெண்
பைலட்டுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய பிறகு,
அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த இந்தியர்களை
ஆபரேஷன் கங்கா என்ற திட்டம்மூலம் மத்திய அரசு
பாதுகாப்பாக மீட்டுவந்தது.
இதற்காக இந்தியப் பிரதமர் மோடி உக்ரைன், ரஷ்ய
அதிபர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு
பேசினார். அதனால், இந்தியக்கொடியைப் பயன்படுத்தி
இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்பினர்.
இந்தியத் தேசியக்கொடியைப் பயன்படுத்தி பாகிஸ்தான்,
பங்களாதேஷ், இலங்கை நாட்டினரும் தப்பித்தனர்.
இந்த நிலையில், ஆபரேஷன் கங்கா திட்டத்தில் கொல்கத்தாவைச்
சேர்ந்த மகா சுவேதா சக்கரவர்த்தி என்னும் பெண் பைலட்
சிறப்பாகப் பணியாற்றி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
24 வயதாகும் இந்தப் பெண், தனியார் விமான நிறுவனத்தில்
பைலட் ஆகப் பணிபுரிந்துவருகிறார்.
ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் பிப்ரவரி 27 ஆம் தேதிமுதல்
மார்ச் 7 ஆம் தேதிவரை உக்ரைன் எல்லையிலுள்ள நாடுகளுக்கு
6 விமானங்களை இயக்கப்பட்ட விமானத்தின் பைலட்டாகப்
பணிபுரிந்து 800 இந்தியர்களை அழைத்துவர உதவியுள்ளார்.
இந்த சமயத்தில் தினமும் 13 முதல் 14 மணி நேரம் விமானத்தை
இயக்கியதாகக் கூறியுள்ளார் சுவேதா.
கொரோனா வைரஸ் பரவியிருந்த காலத்தில் வெளிநாடுகளில்
சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டுவர மத்திய அரசு வந்தே பாரத்
என்ற திட்டத்தை செயல்படுத்தியபோதும் சுவேதா அதில் இணைந்து
பணிபுரிந்துள்ளார்.
அப்போது அயல்நாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை
இந்தியாவுக்கும், தடுப்பூசிகளை புனே நகரிலிருந்து இந்தியாவின்
வெவ்வேறு பகுதிகளுக்கும் கொண்டுசென்ற விமானத்தை இயக்கியுள்ளார்
சுவேதா.