Tuesday, February 4, 2025

தப்பியோடிய முதலையைப் பிடித்த 2 தைரியப் பெண்கள்

தப்பியோடிய முதலையை இரண்டு பெண்கள் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையிலிருந்து ஊர்வனவற்றை மற்றொரு மாகாணத்துக்கு இடமாற்றம் செய்தனர். அவற்றை ஒரு வேனில் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக, ஒரு முதலை, வேனின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாலையில் தப்பி ஓடத் தொடங்கியது.

அதைப் பார்த்து மிரண்டுபோன மிருகக்காட்சி சாலை ஊழியர்கள், அதனைப் பிடிப்பதற்காக அதன் பின்னாலேயே ஓடினர். என்றாலும், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள் தைரியமாகச் சென்று அந்த முதலையைப் பிடித்து அசத்திவிட்டனர். பின்னர், அந்த முதலையை மிருகக்காட்சி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த முதலை புதிய உயிரியியல் பூங்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதுபற்றிக்கூறிய மிருகக்காட்சி ஊழியர்கள், முதலையின் வாய் கட்டப்பட்டிருந்ததால் எந்த நேரத்திலும் ஆபத்து இல்லை என்று தெரிவித்ததுடன், முதலையை வெற்றிகரமாகப் பிடித்த 2 தைரியப் பெண்களையும் பாராட்டினர்.


இந்த நிலையில், முதலை தப்பியோடும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பயங்கரமான சூழலை சிறப்பாகக் கையாள்பவர்கள் பெண்கள் எனப் பதிவிட்டு, 2 தைரியப் பெண்களுக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

Latest news