Friday, January 3, 2025

போட்டோ, வீடியோ எடுக்கும் ஸ்மார்ட் கண்ணாடி

போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் தயாரித்துள்ள ஸ்மார்ட் கண்ணாடி இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பேஸ்புக் நிறுவனமும் ரே-பானின் தாய் நிறுவனமான எஸ்ஸிலோர் லக்ஸோடிகா (essilor luxottica) கண்ணாடி நிறுவனமும் இணைந்து இந்த ஸ்மார்ட் கண்ணாடியை தயாரித்துள்ளன. இந்த கண்ணாடியின் ஒவ்வொரு சிறப்பம்சமும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

நீங்கள் புகைப்படம் எடுக்க விரும்பினாலோ, வீடியோ எடுக்க விரும்பினாலோ ஸ்மார்ட் போனை எடுக்க தேவையில்லை. இந்த ஸ்மார்ட் கண்ணாடியைக் கொண்டு போட்டோ மற்றும் வீடியோ எடுக்கலாம், இசையை கூட இந்த கண்ணாடியின் வழியாகவே கேட்கலாம். அதுமட்டுமில்லாமல் உங்கள் செல்போனுக்கு அழைப்பு வந்தால் இந்த கண்ணாடியின் வழியாகவே பதிலளிக்கலாம்.

ஸ்மார்ட் கண்ணாடியின் ஃபிரேமில் 5 மெகா பிக்சல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. “ஹே பேஸ்புக்” என நீங்கள் கட்டளையிட்டாலே போதும், கண்ணாடியில் உள்ள கேமரா உங்களுக்குத் தேவையான போட்டோவையும் வீடியோவையும் தானாகவே எடுத்து விடும்.

இதில், ஓபன் இயர் ஸ்பீக்கர்கள், சிறிய எல்.இ.டி, மைக்ரோபோன், உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் இந்த ஸ்மார்ட் கண்ணாடி உங்கள் ஸ்மார்ட் போனுக்கு இணையான செயல்திறனை கொண்டுள்ளது. மேலும், உங்கள் எண்ணுக்கு அழைப்பு வரும்போது அருகே எழும் இரைச்சலைக் கட்டுப்படுத்தும் வகையிலான வழிமுறைகள் ஸ்மார்ட் கண்ணாடியில் உருவாக்கப்பட்டுள்ளன.

இது பேஸ்புக் வியூ (facebook view) செயலியுடன் எப்போதும் இணைந்தே இருக்கும். அதனால் ஸ்மார்ட் கண்ணாடியில் எடுக்கப்படும் புகைப்படங்களை நீங்கள் எளிதாக எடிட் செய்துக் கொள்ளலாம். எடிட் செய்த புகைப்படங்களை மற்றவர்களுக்கு பகிரவும் முடியும்.

ஸ்மார்ட் போனுக்கு இணையான அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் விலை 299 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் 22 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும்.

ரே-பான் ஸ்டோரீஸ் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடி அமெரிக்கா, இங்கிலாந்து,இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனைக்கு வந்து விட்டது. விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news