தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த அண்ணன் சீர் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருமணமாகும் மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை சீர்வரிசையாக வழங்கப்பட உள்ளது.
இதற்காக, திட்டத்தின் முதற்கட்டச் செயலாக்கத்திற்கு தமிழக அரசு ரூ.812 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் வருமான வரம்பு ரூ.5 லட்சமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசாணையில் அது ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 5ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே பெறப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கெனத் தனி இணையதளம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. திட்டம் தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் சமூக நலத்துறை வெளியிடவுள்ளது.
இருப்பினும், விண்ணப்ப இணையதளம் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால், திருமணத்திற்குத் தயாராகும் குடும்பங்கள் விண்ணப்பிக்க முடியாமல் காத்திருக்கின்றன. எனவே, முதலமைச்சர் விஜய் விரைவில் இணையதளச் சேவையைத் தொடங்கி, விண்ணப்ப நடைமுறையை அறிவிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
