சட்டைக்குள் 52 பல்லி, 9 பாம்புகளை மறைத்து
எடுத்துச்சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொருட்களைக் கடத்திச்செல்வதற்காகக்
கடத்தல்காரர்கள் பல்வேறு தந்திரங்களைக்
கையாண்டு வருகின்றனர். அந்த வகையில்,
சட்டைக்குள் 52 பல்லிகள், 9 பாம்புகளை மறைத்து
வைத்துக்கொண்டு சென்ற அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான் டியாகோ
அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த ஒரு லாரியை நிறுத்தி
அவர்கள் சோதனை செய்தனர். அதில், சந்தேகப்படும்
படியாக எந்தப் பொருளும் சிக்கவில்லை.
என்றாலும், லாரி வந்த வேகம் போலீஸ் அதிகாரிகளின்
சந்தேகத்தை வலுப்படுத்தியது.
அப்போது அங்கிருந்த சட்டை ஒன்று அவர்களின் கவனத்தை
ஈர்த்தது. உடனடியாக அதை எடுத்துப் பார்த்தபோது 52
கொம்புப் பல்லிகள், 9 சிறிய பாம்புகள் மறைத்து
வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.
அழியும் இனத்தைச் சேர்ந்த அந்த ஊர்வனவற்றைக்
கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை பாதுகாப்பாகக்
கொண்டுசென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வித்தியாசமான முறையில் ஊர்வனவற்றைக் கடத்திய
கடத்தல்காரர்களின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டும்
வேளையில், அவர்களின் செயலையும் கண்டுபிடித்துள்ள
காவல்துறையினரின் நுண்ணறிவையும் பாராட்டிவருகின்றனர்
வலைத்தளவாசிகள்.