விமான விபத்தில் இறந்தவர் 45 ஆண்டுகளுக்குப்பின்
உயிரோடு வந்த அதிசயம்

368
Advertisement

22 வயதில் விமான விபத்தில் இறந்துபோனதாகக் கருதப்பட்ட
ஒரு நபர் 45 ஆண்டுகளுக்குப்பின் உயிரோடு வந்த நெகிழ்ச்சியான
சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், கோட்டயம் அருகேயுள்ள சாஸ்தம்கோட்டா
என்னும் பகுதியைச் சேர்ந்த சஜித் துங்கல் 1974 ஆம் ஆண்டு
வேலைக்காக அபுதாபிக்குச் சென்றார்.

அங்கு மலையாளப் படங்களைத் திரையிடுதல், இந்தியத் திரைப்படக்
கலைஞர்களை ஒருங்கிணைத்துக் கலைநிகழ்ச்சிகளை நடத்துதல்
போன்ற பணிகளைச் செய்துவந்தார்.

இதற்காக ஒருமுறை பம்பாய் வந்த துங்கல் தனது கலைக்குழுவினருடன்
சென்னைக்கு விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அந்த விமானம்
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எந்திரக் கோளாறு ஏற்பட்டு
விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்த விபத்தில் சஜித் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டது.
ஆனால், விபத்தில் அவர் இறக்கவில்லை. உயிர் பிழைத்துக்கொண்டார்.
எனினும் சொந்த ஊருக்குத் திரும்ப மனம் வராமல் பம்பாயிலேயே
சொந்தத் தொழில் முயற்சியில் இறங்கினார்.

அத்தனையும் தோல்வியில் முடிவடைந்துவிட்டதால் வெட்கப்பட்ட
சஜித் தனக்குக் கிடைத்த வேலைகளைச் செய்து காலத்தைக் கழித்துவந்துள்ளார்.
முன்னேறிய பிறகே குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற
வைராக்கியத்தில் இவ்வாறு பிழைப்பைச் செய்துவந்துள்ளார்.

இப்படியே 45 வருடங்கள் கடந்துவிட்டன. இந்தநிலையில், கடந்த
2019 ஆம் ஆண்டில் சஜித்தை அவரது நண்பர் ஒருவர் சந்திக்க நேர்ந்தது.
அப்போது மிக மோசமான நிலையில் சஜித் இருந்துள்ளார். உடனே
அவரைத் தனியார் சேவை அமைப்பு ஒன்றில் சேர்த்துள்ளார்.

இந்த அமைப்பு காணாமல் போனவர்களை அவர்களின் குடும்பத்தோடு
சேர்த்துவைக்கும் அமைப்பாகும். அந்த அமைப்பின்மூலம் கோட்டயத்தில்
உள்ள மசூதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சஜித்தின் குடும்பமும்
கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசவைக்கப்பட்டார்
சஜித். தற்போது சஜித்தை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.