மாமரத்தைச் சுற்றி 4 மாடி வீடு

454
Advertisement

ஃபுல் ஃபர்னிஸ்டு வீட்டைப் பார்த்திருப்பீர்கள்.

ஒரு கிளையைக்கூட வெட்டாமல் மரத்தின்மீதே கட்டப்பட்டுள்ள வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா?

இந்த ஆச்சரியமான 4 மாடி வீட்டைப் பார்க்க உதய்பூர் நகருக்குச் செல்லவேண்டும்.

80 ஆண்டுப் பழமையான அந்த மாமரத்தின்மேல்தான் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

தனது கனவு வீட்டுக்கு Tree House என்று பெயரிட்டுள்ளார் 2000 ஆவது ஆண்டில் இந்த வீட்டைக் கட்டியவரும் வீட்டின் உரிமையாளருமான சிவில் எஞ்ஜினீயருமான குல்பிரதீப் சிங்.

அந்த சமயத்தில் 40 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள ஒரு மாந்தோப்பை அதன் உரிமையாளர் வெட்டி வீட்டுமனைகளாக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது இதனைக் கவனித்த சுற்றுச்சூழல் ஆர்வலரான குல்பிரதீப் சிங் நிலத்தின் உரிமையாளரிடம் பேசி அந்த நிலத்தை வாங்கி இந்தப் புதுமையைச் செய்துள்ளார்.
மரக்கிளைகள் எப்படியெல்லாம் படர்ந்துள்ளதோ அதன்போக்கிலேயே கிளைகளை வெட்டாமல் வீட்டின் சுவர்களை அமைத்துள்ளார் இந்தப் பொறியாளர். இதனால், மீதமுள்ள மாமரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழல் ஆர்வம் அதிகரித்து இந்த நிலப்பகுதியின் விலைமதிப்பும் உயர்ந்துள்ளது.

ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படும் உதய்பூரில் அரண்மனைகள், தோட்டங்கள போன்றவை நிறைந்திருப்பதால் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. தற்போது இந்த மாமர வீடும் சுற்றுலாவாசிகளின் விசிட்டிங் ஸ்பாட்டாகவும் உயர்ந்துள்ளது.

பொதுவாக வீடு கட்டுவதற்கு இடையூறாக இருப்பதாகக் கருதியும், கட்டுமானத் தேவைக்காகவும் மரங்களைப் பலர் வெட்டிவருகிறார்கள். அண்மையில்கூட ஒரு காங்கிரீட் சாலை அமைப்பதற்காக டெல்லியில் 14 ஆயிரத்து 31 மரங்கள் வெட்டப்படவுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில் மாமரத்தின்மீது கட்டப்பட்டுள்ள வீடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.