புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்து விற்கப்படும் பால்

31
Advertisement

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பால் மற்றும் பாலினால் செய்யப்படும் பொருட்களை சாப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள் . எண்ணற்ற பல நன்மைகளை கொண்டுள்ள பால் குடிப்பதனால் நம் உடலுக்கு அதிக பயன்கள் கிடைப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கும் அவை வழிவகை செய்கிறது .  மக்களின் அன்றாட வாழ்வில்  முக்கிய பங்கு வகிக்கும் பாலில் இரசாயன கலப்படம் உள்ளதாக  இந்தியா உணவு பாதுகாப்பு  மற்றும்  தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது .  கடந்த வருடம் முதல் இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை இந்தியாவில் உள்ள சுமார் 1,103 நகரங்களில் விற்பனை செய்யப்படும் 6,432 பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா பால் நிறுவனங்கள் சந்தையில் விற்கக்கூடிய சில பால் மாதிரிகளை சோதனை செய்த போது , அதில் சில பால் மாதிரிகள் உணவு பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்ததோடு ,அந்தப் பால் மாதிரிகளில்  புற்றுநோய் உண்டாகக்கூடிய  அஃப்லாடாக்சின் எம் 1 (Aflatoxin M1) கலந்திருப்பதாகவும் ,  கல்லீரலுக்குத் தீங்கு விளைக்கும் நச்சு  மற்றும்   மைக்ரோ தொற்றுப் பொருள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது . “நாடு முழுவதும் விற்கப்படும் பெரும்பாலான பால், குடிப்பதற்குப் பாதுகாப்பானது என்றாலும் ,  7% பாலில்  சோப்பு பொருள், யூரியா போன்ற இரசாயனங்களை கலந்திருப்பது தெரியவந்துள்ளது . உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைவர் பவன் அகர்வால்  “நாங்கள் சேகரித்த 12 பால் மாதிரிகளில், இந்த சோப்புப் பொருள்கள் கலந்திருந்தன” என்று  கூறியுள்ளார். மேலும் அஃப்லாடாக்சின் எம் 1 அதிகமாகப் பயன்படுத்தும் 3 மாநிலங்களில், தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது .  தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட 551 மாதிரிகளில் 88 மாதிரிகளில் அஃப்லாடாக்சின் எம் 1 கலக்கப்பட்டிருப்பதாக   கண்டறியப்பட்டுள்ளது . பொதுவாக  அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி அஃப்லாடாக்சின் எம் 1, கால்நடை தீவனத்தில் கலக்கப்படுவதால் அது அப்படியே பாலில்  படிந்து விடுகிறது .  தீவனத்தில் கலக்கப்படும் நச்சுத்தன்மையை முற்றிலும் தடை செய்வதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதன் மூலம், பொதுமக்கள் குடிக்கும் பாலில் எந்த வகையிலும் நச்சுத்தன்மை கலக்காது என்று  உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைவர் பவன் அகர்வால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .