நடுத்தர மக்களின் கார் கனவை நனவாக்கும் நோக்கில், இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம் புதிய கவர்ச்சிகரமான இ.எம்.ஐ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.1,999 தவணை செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
கார்களை எளிய தவணையில் பெறுவதற்கு நிதி ரீதியாக புதுமையான திட்டங்களை நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர், கார் வாங்குவதற்கான கனவை இந்த திட்டம் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டதால், இ.எம்.ஐ சலுகை வாடிக்கையாளர்களுக்கு மேலும் வசதியாகியுள்ளது.
மேலும், சில எண்ட்ரி லெவல் மாடல்களின் விலையை 24 சதவீதம் குறைத்திருப்பதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு டிசம்பர் 2025 வரை அமலில் இருக்கும். அதேசமயம், எஸ்யூவி வகை கார்களின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.
தேவைக்கேற்ப விநியோகம் செய்வதில் சவால்கள் இருப்பதாகவும், செப்டம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் Dispatch நிறுத்தப்பட்டு, 22ம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பல கார்களின் விநியோகம் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நீண்ட கால காத்திருப்பைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாதம் ரூ.1,999 தவணை செலுத்தி கார் வழங்கும் மாருதியின் இந்த திட்டம், நடுத்தர மக்களை அதிகளவில் கவரும் வாய்ப்பு உள்ளது. இது வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், இந்திய கார் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பலரின் கார் கனவை எளிதில் நிறைவேற்றும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.