நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்க நல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்தவர் அப்துல் வகாப். இவருக்கு வயது 37. இவர் கராத்தேவில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்கிறார். மேலும்,நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே வகுப்பும், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், இவரின் பயிற்சி மையங்களுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளியுலகிற்கு ஒரு கராத்தே மாஸ்டராகவும், பயிற்சி அளிக்கும் நபராகவும் தோற்றமளித்த இவருக்குள் ஒரு மன்மத சைக்கோ மறைந்திருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதாவது, அப்துல் வகாப் தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவிகளின் தாய்மார்களை குறிவைத்து தனது சில்மிஷ வேலைகளை அரங்கேற்றியுள்ளார்.முதலில் அவர்களை நோட்டமிட்டு, அதில் சில பெண்களை தனக்கானவர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார். பின்னர், சாமர்த்தியமாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்து, அவர்களின் செல்போன் எண்களைப் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ச்சியாக, இனிப்பான ஆசை வார்த்தைகளைக் கூறி, அந்தப் பெண்களை மயக்கி, தனது வலையில் வீழ்த்தி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சுத்தமல்லி பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்யும் ஊழியரின் 13 வயது மகள், இவர்,அப்துல் வகாப்பின் கராத்தே பயிற்சி மையத்தில் பயின்று வந்த நிலையில், அந்த சிறுமியின் தாய், தினமும் காலையில் சிறுமியை பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்போது அப்துல் வகாப், அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணைப் பெற்று, தவறான நோக்கத்துடன் பழகி வந்துள்ளார். சுமார் கடந்த 4 ஆண்டுகளாக இவர்களின் பழக்கம் நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த தகவல் அந்தப் பெண்ணின் கணவரான டீக்கடை ஊழியருக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால், சமீப காலமாக அந்தப் பெண் அப்துல் வகாபுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அப்துல் வகாப், ஏன் போன் செய்தபோது எடுக்கவில்லை என்று கூறி, அந்தப் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், தான் அழைக்கும்போது தன்னுடன் வந்து தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தும் தொனியில் கட்டளையிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டு கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். பொதுமக்கள் வருவதைக் கண்ட அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்தப் பெண் சுத்தமல்லி காவல் நிலையத்தில் அப்துல் வகாப் மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளியான தகவல்கள் போலீசாரையே திடுக்கிட வைத்தன. அதாவது, அப்துல் வகாபின் “மன்மத லீலை” வலையில் சுமார் 8 பெண்கள் வரை ஏமாந்து இருப்பதும், சில பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை இழந்து இருப்பதும் தெரியவந்தது. மேலும், இதனை வெளியே தெரிவித்தால் சமுதாயத்தில் அவமானம், வெளியில் நடமாட முடியாது என்று கருதி, பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் அமைதி காத்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சுத்தமல்லி போலீசார், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அப்துல் வகாபை இரவோடு இரவாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளித்தால், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர். இந்த மன்மத லீலை கராத்தே மாஸ்டரின் கைது, நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.