சின்ன வயசுல நிலாவைப் பார்த்து கதை கேட்டிருப்போம். அந்த நிலாவுக்கு நம்ம பேரையே அனுப்ப ஒரு வாய்ப்பு கிடைச்சா எப்படி இருக்கும்? கற்பனை இல்லை, நிஜம்தான்! நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் II திட்டத்தின் மூலம், உங்கள் பெயரையும் நிலவைச் சுற்றி வர அனுப்ப முடியும். அதுவும் முற்றிலும் இலவசமாக! அது எப்படி? இந்த ஆர்ட்டெமிஸ் II மிஷன் ஏன் இவ்வளவு முக்கியம்? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.
நாசா, “Send Your Name with Artemis II” அதவாது “ஆர்ட்டெமிஸ் II உடன் உங்கள் பெயரை அனுப்புங்கள்” என்ற ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகின் எந்த மூலையில் இருக்கும் யார் வேண்டுமானாலும் தங்கள் பெயரைப் பதிவு செய்து, நிலவைச் சுற்றி 10 நாட்கள் பயணம் செய்யப்போகும் ஓரியன் விண்கலத்தில் தங்கள் பெயரையும் ஒரு பகுதியாக மாற்றலாம்.
அப்படி பதிவு செய்யப்படும் லட்சக்கணக்கான பெயர்களும் ஒரு சின்ன மெமரி கார்டில் சேமிக்கப்பட்டு, அந்த விண்கலத்தில் வைத்து விண்வெளிக்கு அனுப்பப்படும். மனிதகுலத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலாகக் கருதப்படும் இந்த பயணத்தில், உங்கள் பெயரும் ஒரு சாட்சியாக இருக்கும்.
அப்படி என்ன ஸ்பெஷல் இந்த ஆர்ட்டெமிஸ் II மிஷனில்?
ஏப்ரல் 2026-ல் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்பட உள்ளது. இது சாதாரண பயணம் இல்லை. சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு, மனிதர்களை பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால், ஆழமான விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் முதல் பயணம் இதுதான்! 1972-ல் அப்பல்லோ 17 பயணத்திற்குப் பிறகு, மனிதர்கள் இவ்வளவு தூரம் பயணிப்பது இதுவே முதல்முறை.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் பயணிக்கிறார்கள். நாசாவைச் சேர்ந்த ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா விண்வெளி நிறுவனத்தைச் சேர்ந்த ஜெர்மி ஹேன்சன். இவர்கள் ஓரியன் விண்கலத்தில் பயணித்து, சந்திரனின் மேற்பரப்பிலிருந்து சுமார் 7,400 கிலோமீட்டர் தொலைவில் கடந்து சென்று, பூமியைச் சுற்றி வருவார்கள்.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே, எதிர்காலத்தில் மனிதர்களை நிலாவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் அனுப்புவதற்கான தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்ப்பதுதான்.
சரி, உங்கள் பெயரை நிலாவுக்கு அனுப்புவது எப்படி?
இது ரொம்பவே சுலபம். நான் சொல்ற ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க.
படி 1: நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான “Send Your Name with Artemis” என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்.
படி 2:அங்கே உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கேட்கும். அதைச் சரியாக உள்ளீடு செய்யுங்கள். பொதுவாக, ராக்கெட் ஏவப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே பதிவுகள் நிறுத்தப்படும். எனவே, சீக்கிரம் பதிவு செய்வது நல்லது. ஜனவரி 21 ஆம் தேதிக்கு முன் யார் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் .
படி 3: உங்கள் விவரங்களைச் சமர்ப்பித்தவுடன், நாசா உங்களுக்கு ஒரு அற்புதமான டிஜிட்டல் போர்டிங் பாஸை வழங்கும். அதில் உங்கள் பெயர் பொறிக்கப்பட்டு, நீங்கள் நிலாவுக்குப் பயணம் செய்வதற்கான ஒரு அடையாளமாக இருக்கும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து பெருமையாகப் பகிர்ந்து கொள்ளலாம்!
படி 4: உங்கள் பெயர் மற்ற பெயர்களுடன் ஒரு மெமரி கார்டில் ஏற்றப்பட்டு, ராக்கெட் ஏவப்படும்போது விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து நிலவைச் சுற்றி வரும்.
இந்த பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் பற்றிய புதிய தகவல்களை நாசா உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பும். உங்கள் பெயர் நிலவைச் சுற்றும் அந்தத் தருணத்தை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.இது வெறும் பெயரை அனுப்புவது மட்டுமல்ல. விண்வெளி ஆய்வில், மனிதகுலத்தின் அடுத்த சாதனையில் நாமும் ஒரு துளியாக இணைகிறோம் என்பதற்கான அடையாளம்.