நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பிரதமராக பதவி ஏற்றதும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் நேபாள அதிபர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதை 18 வயதில் இருந்து, 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின் மூலம்,16 வயது நிறைவடைந்தோர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆனால், 18 வயது நிரம்பிய பின்னர்தான் வாக்கு செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.