பாகிஸ்தான் அமைச்சர்களை பெண் பத்திரிகையாளர் ஒருவர், நேரலையில் சம்பவம் செய்த விஷயம் உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
பாகிஸ்தான் நடத்திய பஹல்ஹாம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததால், இரு நாடுகள் மத்தியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடல் தொடங்கி, IPL நிறுத்தம் வரை இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்துக்கு மத்தியில், பத்திரிகையாளர் Yalda Hahimன் சமீபத்திய பேட்டிகள் மிகப்பெரும் அளவில் விவாதங்களையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட Yalda, குடும்பத்துடன் சிறு வயதில் ஆஸ்திரேலியாவிற்கு குடி பெயர்ந்தவர்.
தற்போது லண்டனில் இயங்கும் Sky News சேனலில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது சமீபத்திய நேர்காணலில், பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடம் அளிப்பதை பாகிஸ்தான் மறுப்பது பற்றி, அந்நாட்டு தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தத்தாரிடம் கேள்வி எழுப்பினார்.
பதிலுக்கு அட்டாவுல்லா ”எங்களது நாட்டில் தீவிரவாதமே இல்லை. உலக சமாதான தூதுவரே நாங்கள் தான்” என்ற ரேஞ்சுக்கு கதை விட்டார். ஆனால் Yalda அசரவில்லை. அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், தனக்கு அளித்த முந்தைய பேட்டியில் பாகிஸ்தான் நாடு, தீவிரவாதத்தை வளர்த்து விடுவதை ஒப்புக் கொண்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.
இதனால் நேரலையிலேயே அட்டாவுல்லாவின் முகம் தக்காளிப்பழம் போல ஜிவ்வென சிவந்து விட்டது. அதற்கு அடுத்து அவரால் தயக்கமில்லாமல் பேச முடியவில்லை. ஆளை விட்டால் போதும் என்ற ரேஞ்சிலேயே மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்தார்.Yaldaவின் இந்த நேர்காணல் இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், ” உங்களோட துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். பாகிஸ்தானோட முகத்திரையை கிழிச்சிட்டீங்க. உங்க தைரியத்துக்கு நிச்சயம் அவார்டு கொடுக்கணும்,” என்று விதவிதமாக அவரை பாராட்டி வருகின்றனர்.
Yalda தன்னுடைய பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். முன்னதாக BBC தொகுப்பாளராக பணியாற்றிய Yaldaவிற்கு, பத்திரிக்கை துறையில் அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் ஆஸ்திரேலிய ஊடக அமைதி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.