வெறும் 35 வயதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர், IPL அம்பயராக அவதாரம் எடுத்துள்ளார். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
உலகின் தலைசிறந்த வீரரான விராட் கோலி கடந்த 2008ம் ஆண்டு, U19 உலகக்கோப்பையை கேப்டனாக வென்று சாதனை படைத்தார். அப்போது அந்த அணியில் இடம்பெற்று இருந்தவர் தன்மய் ஸ்ரீவஸ்தவா. கோலியின் சக வீரரான இவர் இந்திய அணி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
அந்த தொடரில் 262 ரன்கள் குவித்த தன்மய், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் 46 ரன்கள் அடித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார். இடதுகை பேட்ஸ்மேனான இவர் IPL தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால், அவரால் IPLல் ஜொலிக்க முடியவில்லை. கடந்த 2020ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து, ஓய்வு பெறுவதாக தன்மய் அறிவித்தார். முதல்தர கிரிக்கெட்டில் மொத்தமாக 7 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்திருக்கும் ஸ்ரீவஸ்தவா, ஓய்வுக்கு பிறகு ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களில், நடுவராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் வரவிருக்கும் IPL தொடரில், அம்பயராக தன்மய் களமிறங்குகிறார். இதனை உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கமும் உறுதி செய்துள்ளது. இதன்மூலம் IPL தொடரில் வீரராகவும், அம்பயராகவும் செயல்பட்ட முதல் வீரர் என்னும் பெருமை ஸ்ரீவஸ்தாவுக்குக் கிடைத்துள்ளது.
வெறும் 35 வயதில் IPL நடுவராகக் களமிறங்கும் ஸ்ரீவஸ்தவா, IPL போட்டியொன்றுக்கு ஊதியமாக 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.