பேருந்தில் பெண்கள் உட்காரத் தடை

400
Advertisement

ஏபிசிடி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு பேருந்துக் காமெடிக் காட்சியைப்போல் நிகழ்ந்த சம்பவங்களால் தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

அந்தப் படத்தில் தம்பதி இருவர் உட்கார்ந்திருப்பர். அந்தத் தம்பதியில் ஒருவர் தன் கணவரிடம் என்னங்க இந்தப் பஸ் இப்படியே போய்க்கிட்டு இருக்கு என்று அலுத்துக்கொள்வார். அதற்கு அப்பெண்ணின் கணவர், கண்டக்டரான நடிகர் வடிவேலுவின் முதுகில் தட்டி, இப்படி மசமசனு போய்க்கிட்டு இருந்தா எப்ப ஊர்ப்போய்ச் சேர்றது என்று சலிப்போடு கேட்பார்.

அதற்கு வடிவேலு, உன் மனைவியை டிரைவர் சீட் அருகே போய் உட்காரக் கேட்டுக்கொள்வார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண் பயணியும் டிரைவர் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்துகொள்வார். அந்தப் பெண்ணைப் பார்த்ததும், தன்னை மேலும் அழகுபடுத்திக்கொள்ளும் டிரைவர், அதன்பின் பேருந்தை வேகமாக ஓட்ட ஆரம்பிப்பார்.
பேருந்திலுள்ள பயணிகள் அனைவரும் அலுங்கவும் குலுங்கவும் தொடங்குவர்.
அதனால், டிரைவர் அருகே இருந்த பெண் எழுந்துவந்து, தன் கணவர் அருகே அமர்ந்துகொள்வார். அதன்பிறகு, டிரைவர் பேருந்தை முன்புபோல் மெதுவாக ஓட்ட ஆரம்பிப்பார்.

அந்த நிலையில் அந்தப் பெண் பயணியின் கணவர், வடிவேலுவிடம் ஏம்பா வேகமா போற எல்லா பஸ்சும் இப்படித்தான் போகுதா என அப்பாவியாகக் கேட்பார்.
அவரும் ஒருசிலபேரு இப்படித்தான் ஓட்டுறாய்ங்க என்பார்….

மிகவும் ரசிக்கும்விதமாக அமைக்கப்பட்ட அந்தக் காட்சியைப்போல், நிஜத்தில் ஆங்காங்கே நடைபெற்றுள்ளதைப் பலர் பார்த்திருப்போம். அப்படிச்சென்ற பேருந்தில் சிலர் பயணித்தும் இருப்பர். அப்போது விபத்தை எதிர்கொண்ட சூழ்நிலையும் உருவாகியிருக்கலாம்.

பரபரப்பான நேரத்தில் பேருந்தில் உட்கார இருக்கை கிடைக்காத பெண்களை எஞ்ஜின் பேனட்மீது உட்கார வைக்கும் வழக்கம் தனியார்ப் பேருந்துகளில் மட்டுமன்றி, அரசுப் பேருந்துகளிலும் உள்ளது. பெண் பயணிகள் அருகே அமர்ந்ததும் அவர்களிடம் டிரைவர்கள் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டத் தொடங்குகின்றனர். இதனால், டிரைவரின் கவனம் சிதறி பேருந்து விபத்துக்குள்ளாக நேரிடுகிறது.

இத்தகைய நிலையைத் தவிர்ப்பதற்காக அரசு புது உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பெண்களிடம் ஓட்டுநர்கள் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குவதால் விபத்துகள் நேர்வதாகப் புகார்கள் எழுந்துள்ளதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த உத்தரவின்படி, இனிமேல் பெண் பயணிகளை டிரைவர் சீட்டின் இடப்புறம் உள்ள ஒற்றை இருக்கையிலோ, எஞ்சின்மீதுள்ள பேனட் மீதோ உட்கார அனுமதிக்கக்கூடாது.

இந்த உத்தரவு பழைய உத்தரவாகக் கருதப்பட்டாலும், தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.