ஹிஜாப் அணிந்த பெண்ணை அனுமதிக்க மறுத்த
பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் மூடப்பட்டுள்ளது.
பஹ்ரைன் தலைநகர் மனாமா அடில்யாவின்
சுற்றுப்புறத்தில் லான்டர்ன்ஸ் உணவகம் உள்ளது.
அந்த உணவகத்தின் மேலாளராக இந்தியர் ஒருவர்
பணிபுரிகிறார்.
மார்ச் மாதம் 24 ஆம் தேதி அந்த உணவகத்துக்குள்
ஒரு பெண் செல்லும்போது அங்குள்ள ஊழியர்கள்
தடுத்துள்ளனர். அதை அந்தப் பெண்ணின் தோழியான
மரியம் நஜி வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவைத் தனது ட்டுவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்
தளங்களில் வைரலானது. அந்நாட்டு அதிகாரிகளின்
கவனத்துக்கும் சென்றது. உடனே அதிகாரிகள்
அந்த உணவகத்தை மூடினர்.
மேலும், பஹ்ரைன் நாட்டு சுற்றுலா மற்றும் கண்காட்சி
ஆணையமும் இந்தப் பிரச்சினை குறித்து தனது
விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக அந்த உணவகம் இன்ஸ்டாகிராமில்
தங்கள் விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
அதில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பஹ்ரைனின்
அழகான ராஜ்ஜியத்தில் அனைத்து நாட்டினருக்கும் சேவை
செய்து வருகிறோம். ஒரு மேலாளரால் இந்தத் தவறு ஏற்பட்டுள்ளது.
அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அனைவரும் குடும்பத்துடன் வந்து மகிழவும், வீட்டில் இருப்பதைப்
போன்ற உணரவும் எங்கள் உணவகம் சிறந்த இடமாகும்.
ஒரு நல்லெண்ணச் செயலாக பஹ்ரைனில் உள்ள எங்கள்
வாடிக்கையாளர்கள் அனைவரும் மார்ச் 29 ஆம் தேதி
இலவசமாக உண்டுமகிழ அன்போடு அழைக்கிறோம்
என்று விளக்கமளித்துள்ளது.