Tuesday, July 29, 2025

பஸ்டாண்டில் பெற்ற குழந்தையை விட்டுவிட்டு, இன்ஸ்டா காதலனுடன் பைக்கில் பறந்த பெண்..

தற்போது இருக்கும் நவீன உலகில் சமூக வலைத்தளங்கள் மற்றும் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இது மட்டுமல்லாமல் திருமணம் தாண்டிய உறவுகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டது என்று பலரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், ஹைதராபாத் அருகே அரங்கேறிய ஒரு சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஹைதராபாத் அருகில் உள்ள நல்கொண்டாவில் இளம்பெண் ஒருவர் காதலனுக்காக தனது குழந்தையை பேருந்து நிலையத்தில் அனாதையாக விட்டுவிட்டு சென்றது தெரிய வந்தது.பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அதில் ஒரு பெண் தனது 2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தின் இருக்கையில் அமர வைத்து விட்டு வெளியில் கிளம்பி செல்கிறார். அவர் சென்று சிறிது நேரமாகியும் தாயார் வராததால் இருக்கையில் இருந்து இறங்கிய குழந்தை அருகில் நடந்து சென்று தனது தாயை தேடியது.

குழந்தை அங்கும் இங்குமாக நடந்து தனது தாயை தேடியபடி இருந்தது.அதோடு அக்குழந்தையின் தாயார் தனது காதலன் கொண்டு வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறிச்சென்றது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

குழந்தை பேருந்து நிலையத்தில் அனாதையாக தாயை தேடிக்கொண்டிருந்ததை பார்த்த அங்கிருந்த பயணிகள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் குழந்தையை தங்களது பாதுகாப்பில் எடுத்தனர். உடனே அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோதுதான் உண்மை தெரிய வந்தது.

கண்காணிப்பு கேமரா பதிவை குழந்தைக்கு காட்டியபோது தனது தாயை பார்த்தவுடன் அம்மா என்று கைகாட்டியது.

குழந்தையின் தாயார் சென்ற இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் காதலன் தனது நண்பனிடம் இரு சக்கர வாகனத்தை இரவல் வாங்கி இருந்தது தெரிய வந்தது.

மேலும்,குழந்தையின் தாயார் நவீனா என்று தெரிய வந்தது. அவரும், அவரது காதலனும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். நவீனாவின் கணவரும் அங்கு வரவழைக்கப்பட்டார். நவீனா தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதையடுத்து குழந்தையை அதன் தந்தையிடம் போலீஸார் ஒப்படைத்தனர். விசாரணையில் நவீனாவிற்கு அவரது காதலன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி இருந்தார். இன்ஸ்டாகிராம் காதலனை கரம்பிடிக்க 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் கைவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமணம் தாண்டிய உறவுகளால் பெண்கள் தங்களது கணவர்களை கொலை செய்யும் சம்பவங்கள் ஆங்காங்கே தலைதூக்கிய நிலையில், சமீப காலமாக குழந்தைகளை கொலை செய்வது கூட்டநெரிசல் பகுதியில் விட்டுவிட்டு செல்வது என நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது..

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News