கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு : 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கீதா (51). இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கீதாவிடம் 500 ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

கீதா பணம் தர மறுக்கவே மது பாட்டிலை எடுத்துக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து 15,000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு மூவரும் தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கோயம்பேடு கே 11 பேருந்து நிலைய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

பின்னர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (31), சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (எ) சத்தியா (35), சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த அன்புச்செல்வி (38) ஆகிய இரு பெண்கள் உட்பட மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 670 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related News

Latest News