சென்னை கொரட்டூர் சீனிவாச நகரில் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி ராம்பாய் (75). இவர் வீட்டு வாசலில் கோலம் போட்டுவிட்டு பின்னர் கடைக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டு இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் அவரை பின் தொடர்ந்து கத்திமுனையில் மிரட்டி 3 சவரன் தங்க சங்கலி 500 பணத்தை பறித்துச் சென்றார்.
இது குறித்து ராம்பாய் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கொரட்டூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் ஆரஞ்சு நிற புடவை அணிந்து சென்ற பெண் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் வழிப்பறியில் ஈடுப்பட்டது தேவி (45) என்பதும் தெரியவந்தது.
திருவெற்றியூரை சேர்ந்த இவர் சென்னையில் பல்வேறு இடங்களில் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் மீது தண்டையார்பேட்டை, சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, கொருக்குபேட்டை, வில்லிவாக்கம்கொரட்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 12க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது உறுதி செய்த நிலையில் திருவொற்றியூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தேவியை கொரட்டூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதிகாலையில் திறந்துகிடக்கும் வீடுகள் தனியாக நடந்து செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபடுவது இவரது ஸ்டைல் என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்..