தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம பெண் ஒருவர், போயஸ்கார்னிடல் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் குண்டுவெடிக்க போவதாக கூறினார். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டிலும் குண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் போனில் பேசி மிரட்டல் விடுத்த பெண்ணின் பெயர் ராதா (34 வயது) என்றும், சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ராதாவை பிடித்து வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.
