2024–2025 காலகட்டத்தில் நடைபெற்ற உக்ரைன்–ரஷ்யா மோதல், ஈரான்–இஸ்ரேல் மோதல் மற்றும் இந்தியா–பாகிஸ்தான் இடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் ஆகியவற்றில் ட்ரோன்கள் மிக முக்கிய பங்கு வகித்தன. இதை கருத்தில் கொண்டு, இந்திய ராணுவம் ட்ரோன் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு புதிய படைப்பிரிவுகளை உருவாக்கி வருகிறது.
அந்த புதிய படைப்பிரிவுக்கு ‘ஷக்திபான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் மொத்தம் 15 முதல் 20 ஷக்திபான் படைப்பிரிவுகளை அமைக்கும் திட்டத்தில் உள்ளது. இந்தப் படைப்பிரிவுகள் திரள் ட்ரோன்கள் (Swarm Drones), சுழலும் வெடிபொருட்கள் (Loitering Munitions) மற்றும் 5 கிலோமீட்டர் முதல் 500 கிலோமீட்டர் வரையிலான தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய நவீன ஆளில்லா வான்வழி வாகனங்களை கையாளும்.
இந்த ஷக்திபான் படைப்பிரிவுகள் இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவின் கீழ் செயல்படும். இதில் சில ஆரம்ப யூனிட்கள் ஏற்கனவே களத்தில் செயல்படத் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த படைப்பிரிவுகள் உருவாக்கம், சமீபத்தில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவேதி வகுத்த ராணுவ மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். எதிர்கால தொழில்நுட்ப அடிப்படையிலான போர்களுக்கு இந்திய ராணுவத்தை தயார்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, 50 கிலோமீட்டர் முதல் 500 கிலோமீட்டர் வரையிலான தாக்குதல் திறனில் இருந்த இடைவெளியை நிரப்புவதற்காக இந்த படைப்பிரிவுகள் உருவாக்கப்படுகின்றன.
500 கிலோமீட்டருக்கு அப்பால் இந்திய ராணுவம் ஏற்கனவே பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. அதேபோல், 120 கிலோமீட்டர் தாக்குதல் திறன் கொண்ட பினாகா பல பீப்பாய் ராக்கெட் அமைப்புகளும் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தை கவர் செய்வதற்கான தீர்வாகவே ஷக்திபான் படைப்பிரிவுகள் அமைக்கப்படுகின்றன.
ஷக்திபான் படைப்பிரிவுகளுக்கான உபகரணங்களை வாங்க இந்திய ராணுவம் விரைவில் டெண்டர் வெளியிட உள்ளது. இதில் சுமார் 850 சுழலும் வெடிபொருட்கள் மற்றும் அவற்றை ஏவுவதற்கான அமைப்புகள் இடம்பெறும். இந்த கொள்முதல் விரைவு நடைமுறையில் நடைபெறும் என்றும், இதன் மதிப்பு சுமார் 2,000 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டரில் சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ், அதானி டிஃபென்ஸ், ராஃபேம் போன்ற இந்திய நிறுவனங்கள் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டெண்டரில் வெற்றி பெறும் நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்குள் ஆயுதங்களை விநியோகிக்க வேண்டும்.
இதனுடன், இந்திய ராணுவம் ‘திவ்யஸ்திரா’ பேட்டரிகள் என்ற புதிய அமைப்புகளையும் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பீரங்கிப் படையின் கீழ் 35 முதல் 40 திவ்யஸ்திரா பேட்டரிகள் உருவாக்கப்படவுள்ளன.
பீரங்கிப் படையில் ‘பேட்டரி’ என்பது பொதுவாக 6 முதல் 8 பீரங்கிகளை கொண்ட சிறிய பிரிவைக் குறிக்கும். அதேபோல், ‘திவ்யஸ்திரா’ பேட்டரிகள் என்பது பல தாக்குதல் ட்ரோன்களை கொண்ட சிறப்பு பிரிவுகளாகும். இவை முதலில் எதிரியின் இருப்பிடத்தை மிகத் துல்லியமாக கண்காணிக்கும்.
தேவையான தகவல்கள் உறுதியாக கிடைத்தவுடன், தற்கொலை ட்ரோன்களை பயன்படுத்தி இலக்குகளை தாக்கி அழிக்கும். பீரங்கிகளால் எளிதில் தாக்க முடியாத பதுங்குக் குழிகள் போன்ற இடங்களில் உள்ள எதிரிகளை அழிப்பதில் இந்த படைகள் மிகுந்த பயன் தரும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
