இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றத்தால் ஒத்தி வைக்கப்பட்ட IPL போட்டிகள், வருகின்ற மே 17ம் தேதி மீண்டும் தொடங்குகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்தநிலையில் வெளிநாட்டு வீரர்கள் அடுத்தடுத்து விலகுவதால், அவர்களுக்கு பதிலாக அணிகள் மாற்று வீரர்களை எடுத்துக் கொள்ளலாம் என்று BCCI அறிவித்துள்ளது. அதேநேரம் 19வது சீசனுக்கு இந்த வீரர்கள் அணியில் நீடிக்க முடியாது என்றும் BCCI செக் வைத்துள்ளது.
இதனால் காயமடைந்த வீரர்களுக்கு மாற்றாக, அணிக்குள் வந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியாத சூழல் அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விதியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெகுவாக பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஏனெனில் ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல் என்று 3 இளம்வீரர்களை சென்னை அணி மாற்று வீரர்களாக எடுத்து வைத்துள்ளது. BCCIயின் இந்த விதியால் மேற்கண்ட வீரர்கள் மினி ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டிய சூழல்.
‘இளங்கன்று பயமறியாது’ என்பதற்கு ஏற்ப, இந்த 3 இளஞ்சிங்கங்களுமே அடித்து ஆடி தங்களை நிரூபித்து இருப்பதால், கட்டாயம் மினி ஏலத்தில் மற்ற அணிகளும் இவர்களை ஏலத்தில் எடுக்க போட்டிபோடும். இதனால் ஏலத்தொகை உட்பட பல்வேறு பிரச்சினைகளை CSK எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படுவதற்கு முன்னால், வாங்கப்பட்ட வீரர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்று அறிவிக்க வேண்டும். என BCCIயிடம் CSK கோரிக்கை வைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒருவேளை சென்னை நிர்வாகத்தின் கோரிக்கையை BCCI நிராகரித்தால், CSK அணிக்கு இது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.