தங்கத்தில் செய்யும் முதலீடு என்றுமே வீண்போகாது என்பதால் பலர் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தங்கம் பொதுவாகவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் சர்வதேச சந்தை நிலவரப்படி பெரும்பாலான நேரங்களில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இதனை அடுத்து கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது. உலகப் பொருளாதார சூழல்கள் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை தங்க விலை ஏற்றத்திற்கு காரணமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலை சற்று இறங்குமுகமாக இருக்கிறது.
அதன்படி, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 8,215 ரூபாய்க்கும் சவரனுக்கு, 120 ரூபாய் சரிந்து 65,720 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனாலும் வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் கடந்த வாரம் 10 கிராமுக்கு ரூ.89,796 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டிய பிறகு, உள்நாட்டு தங்கத்தின் விலை திங்கட்கிழமை சரிவை நோக்கி நகர்ந்தது.
கடந்த சில தினங்களாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் சற்று விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் கொடுத்தது. இருப்பினும் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் முதல் தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பரஸ்பர வரி விதிப்பை தீவிரமாக அமல்படுத்த டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கான வரி விதிப்புகளை அவர் ஏற்கெனவே அறிவித்திருப்பத்தை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரி விதிக்கும் திட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி அமலுக்கு வருவதாக தெரிகிறது. இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரிக்கும் என்றும் விலை உயரக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால் வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கணிக்கப்படுகிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.