சில தினங்களுக்கு முன் , ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி ஜடா பிங்கெட் பற்றி கேலி செய்ததற்காக தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்தார்.
நேரலையில் நடந்த இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியது. சர்ச்சைக்குள்ளான இந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித் , நான் இப்படி நடந்து கொண்டததற்காக ஆஸ்கர் விழா குழுவினர், மற்றும் சக போட்டியாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்
மேலும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு விழா மேடையில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
நடிகர் வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்கர் அகாடமி தெரிவித்திருந்தது. இதுகுறித்து ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம் ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தலைமைக் குழு உறுப்பினர்களின் சந்திப்பு வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் அதன் பிறகு வில் ஸ்மித் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் , விருது விழாவை நடத்தும் அமைப்பில் இருந்து பதவி விலகினார் வில் ஸ்மித்.
சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். அவரின் முதல் ஆஸ்கர் விருதும் இதுவே என்பதை குறிப்பிடத்தக்கது.