வாட்சப் செயலுக்கு மாற்றாக ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி என்பதால் பலரும் அரட்டை செயலியை டவுன்லோடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரட்டை செயலியில் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்று இணையத்தில் கேள்வி எழுந்த நிலையில், இதற்கு பதில் விளக்கம் அளித்துள்ளார் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு.
அதில் அவர் கூறியது “எங்கள் முழு வணிகமும் நாங்கள் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டோம் மற்றும் அவர்களின் தரவை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அமைந்து இருக்கிறது. எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். அது விரைவில் வரப்போகிறது.ஆனால் அதைவிட நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது என்று தெரிவித்தார்.மேலும் உலக சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம். எல்லா இடங்களிலும் எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையையும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கு அடுத்த பதிவில், “எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இப்போது சோதனையில் உள்ளது. நாங்கள் அதை நவம்பரில் வெளியிடப் போகிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இல்லாதது மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அரட்டை செயலி செயல்படுகிறது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.