தனியார் துறையில் பணிபுரியும் பெரும்பாலானோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது EPFO தனது புதிய டிஜிட்டல் தளமான EPFO 3.0-வை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது PF கணக்குகள் வங்கி சேவைகளைப் போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது PF உறுப்பினர்கள் தங்களது பணத்தைப் பெற 2–3 நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் கோரிக்கை செயல்முறை மற்றும் காகிதப்பணிகளும் சிரமமாக இருந்தன. ஆனால் EPFO 3.0 அறிமுகமாகியதும், இந்த சிக்கல்கள் தீர்க்கப்படும். PF கணக்கு வைத்திருப்பவர்கள் இனி ATM வழியாக நேரடியாக பணத்தை எடுக்க முடியும். அதேபோல் PhonePe, Google Pay, Paytm போன்ற UPI செயலிகளுடன் PF கணக்கை இணைக்கலாம். இதன் மூலம் நிமிடங்களில் விரைவான பரிவர்த்தனை சாத்தியமாகும்.
புதிய தளத்தின் மூலம் கோரிக்கைகள் மற்றும் கணக்கு புதுப்பிப்புகள் வேகமாக செயல்படும். காகிதப்பணி மிகுந்தளவில் குறையும். சிறிய தவறுகளை ஆன்லைனில் உடனே சரிசெய்யும் வசதியும் கிடைக்கும். இதற்குடன், ஓய்வூதியம் தொடர்பாகவும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ₹1000 ஆக உள்ளது. EPFO 3.0 செயல்பாட்டில் வந்த பின், அதை ₹1500 முதல் ₹2000 வரை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. அக்டோபர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாற்றத்தால் சுமார் 8 கோடி சந்தாதாரர்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள். தொழிலாளர்கள் அவசர தேவைகளில் உடனடியாக பணத்தை எடுக்கலாம். ஓய்வு பெற்றவர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கக் கூடும். மொத்தத்தில், EPFO 3.0 மூலம் டிஜிட்டல் அமைப்பு வேகமாகவும் வெளிப்படையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.