தங்கம் விலை ஒன்றரை லட்சம் ரூபாயையும், ஒரு கிலோ வெள்ளி மூன்று லட்சம் ரூபாயையும் தொட்டுவிட்ட நிலையில், சாமானிய மக்கள் இனி தங்கத்தை கனவில் மட்டும்தான் பார்க்க முடியுமா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட் 2026 ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது!
பிரதமர் மோடியின் ஆட்சியில் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தயாராகிவிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக ஒரு ஞாயிற்றுக்கிழமையான இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது கூடுதல் சிறப்பு. ஆனால் மக்களின் கண்கள் அனைத்தும் தங்கம் விலையின் மீதுதான் இருக்கிறது.
கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்ட விலையால் நகைக்கடைகளில் கூட்டம் குறைந்து, விற்பனை மந்தமாகிவிட்டது. இந்தச் சூழலில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியையும், ஜிஎஸ்டி (GST) வரியையும் குறைத்தால் மட்டுமே நடுத்தர மக்களால் இனி தங்கம் வாங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் 11 சதவீதமும், வெள்ளி 31 சதவீதமும் விலை சரிவைச் சந்தித்துள்ளன. இந்தச் சரிவின் பலன் இந்திய மக்களுக்குக் கிடைக்க வேண்டுமானால், இன்றைய பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்பு வந்தே ஆக வேண்டும் என்று வர்த்தகர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, வருமான வரி செலுத்துபவர்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. ஏற்கனவே 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு மற்றும் 75,000 ரூபாய் ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை அந்த வரி விலக்கு வரம்பை 12 லட்சத்தில் இருந்து 14 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களுக்கு, தங்கம் விலையில் ஆறுதலும், வருமான வரியில் லாபமும் கிடைக்குமா? நிதியமைச்சரின் அந்தச் சிவப்புப் பையில் இருக்கும் ரகசியம் என்ன? இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்!
